திண்டுக்கல்
தொழில் அதிபரின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
|திண்டுக்கல்லில் தொழில் அதிபரின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
தொழில் அதிபர்
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ரெத்தினம். இவர், திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் தாளாளராகவும் இருக்கிறார். திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் இவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் அவருடைய அலுவலகமும் செயல்படுகிறது.
இவருடைய வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொழில் அதிபர் கே.ரெத்தினத்தின் வீட்டின் முன்பு 3 கார்களும், அலுவலகத்துக்கு ஒரு காரும் வந்து நின்றன. அந்த கார்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கினர்.
அமலாக்கத்துறை சோதனை
பின்னர் தொழில் அதிபர் ரெத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். மேலும் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. இதேபோல் வெளியே இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதுமட்டுமின்றி வீடு மற்றும் அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணினிகள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.
சோதனை நடந்தபோது தொழில் அதிபர் ரெத்தினம் வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றுவிட்டார். இதனால் அவருடைய குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
உறவினர் வீடு
இதற்கிடையே தொழில் அதிபர் ரெத்தினத்தின் உறவினரும் தொழில் அதிபருமான கோவிந்தராஜ், என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டிலும் 4 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில் தொழில்அதிபரின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினரின் வீடு என 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த 3 இடங்களிலும் காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்கு பின்னரும் தொடர்ந்தது. சுமார் 9 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
தொழில் அதிபர் ரெத்தினத்தின் மூத்த மகன் துரை கார்த்திக் ஜி.டி.என். கலைக்கல்லூரி இயக்குனராகவும், இளைய மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சியின் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் உள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை நடப்பதை அறிந்த சிலர், தொழில் அதிபரின் வீட்டு முன்பு திரண்டனர்.
திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபரின் வீடு, அலுவலகம், உறவினரின் வீடு ஆகிய 3 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.