நாமக்கல்லில் 24 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை...!
|நாமக்கல்லில் 24 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர், ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் டயர் கடை மணி என்கிற காளியப்பன். இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
நேற்று மாலை 3 மணி அளவில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அவரது வீடு மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது தற்போது வரை நடந்து வருகிறது. 24 மணி நேரத்திற்கு மேலாக அமலகாத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்திவேலூரில் உள்ள வங்கிக்கு அழைத்துச்சென்று அவரது வங்கிக் கணக்கு விபரங்கள், லாக்கர் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனை முடிவில் தான் அமலாக்க துறையினரால் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.