அமைச்சர் பொன்முடியிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை
|அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கெளதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 19 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இதன்பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பினார். அமைச்சர் பொன்முடியிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. இருப்பினும், இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
குவாரியில் அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சம்மன் அனுப்பப்பட்டது. அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகினர்.
நேற்று 19 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் மகன் கவுதம சிகாமணியுடன் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி. செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் கெளதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 100 கேள்விகள் அடங்கிய "ஆம், இல்லை" என்ற அடிப்படையில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.