தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்
|அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து சென்றதாகவும் டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரியின் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
இந்த நிலையில், சோதனையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. தமிழக டிஜிபியிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.