திருவாரூர்
விவசாய களம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
|கூத்தாநல்லூர் அருகே விவசாய களம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே விவசாய களம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய களம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் மிளகுளம் அருகில் வயல் பகுதியில் அமைந்துள்ள மேடான இடத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு கலவையால் விவசாய களம் அமைக்கப்பட்டது.
இந்த விவசாய களத்தில் அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் உளுந்து, பயறுகளை நன்கு உலர்த்திய பிறகு, மூட்டைகளாக கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.
மண் அள்ளுவதை நிறுத்திய விவசாயிகள்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாய களத்தை சுற்றிலும் மண் அள்ளப்பட்டதால், அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், விவசாய களம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தொடர்ந்து மண் அள்ளுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, பள்ளமான இடத்தினை சீரமைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாய களத்தில் பள்ளம் ஏற்பட்ட இடத்தையொட்டி கம்பி வேலி வைப்பதற்காக தூண்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு வேலி அமைப்பதால் விவசாய களத்துக்குள் சென்றுவர முடியாத நிலை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தடுக்க வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'இங்கு உள்ள விவசாய களத்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். எனவே விவசாய களம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
பொதுவான இடத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உள்ள விவசாய களத்தை சீரமைப்பு செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.