அரிவாளால் தாக்கிய ரவுடிகள்; துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் - ஈரோட்டில் பரபரப்பு
|கொலை உள்பட 18 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பெருந்துறையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெருந்துறை,
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சிவசுப்ரமணி. இவர் மீது களக்காட்டில் நடந்த கொலை உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே, ரவுடி சிவசுப்ரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருப்பதாக நெல்லை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நெல்லை தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆண்டோ தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி சிவசுப்ரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்த ரவுடி சிவசுப்ரமணி முயற்சித்தார்.
இதையடுத்து, தற்காப்புக்காக ரவுடி சிவசுப்ரமணி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய ரவுடி சிவசுப்ரமணி தனது கூட்டாளிகளுடன் தலைமறைவானார். ரவுடி அரிவாளால் தாக்கியதில் போலீசார் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தப்பியோடிய ரவுடி சிவசுப்ரமணி அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரிவாளால் தாக்குதல் நடத்திய ரவுடியை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.