அரியலூர்
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 65 பேருக்கு பணி நியமன ஆணைகள்
|தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 65 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் கலந்து கொண்ட 1,410 இளைஞர்களில், 149 இளைஞர்கள் தனியார் துறை நிறுவனங்களின் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இதில் 65 இளைஞர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பணி நியமன ஆணையினை வழங்கி பேசினார். மீதமுள்ள நபர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு நடைபெற்ற பின் ஆணை வழங்கப்படவுள்ளது. மேலும் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரியலூர் அரசு கலை கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் தற்பொழுது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு கலெக்டருடன் கலந்து ஆலோசித்து குறுகிய சாலைகளை சரி செய்த பின் விரைவில் அரசு கலை கல்லூரி வரை பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். முகாமில் இணை இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி, கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.