கரூர்
வேலைவாய்ப்பு முகாம்: குளித்தலையில் இருந்து பஸ் வசதி ஏற்படுத்தி தர அறிவுறுத்தல்
|வேலைவாய்ப்பு முகாமையொட்டி குளித்தலையில் இருந்து அதிக அளவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 28-ந்தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.
பஸ் வசதி
முகாமில் தொழில்துறை நிறுவனங்களை அதிக அளவில் பங்கேற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, குளித்தலை நகராட்சி, பேரூராட்சித்துறையினர் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை வாகனங்கள் கொண்டு சென்று பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்களை கொடுக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.மேலும், தூய்மைப்பணி, குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். முகாம் முடிவுற்ற பிறகு கல்லூரி வளாகத்தினை தூய்மைப்படுத்த வேண்டும். அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்கான பணிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அய்யர்மலை, தரகம்பட்டி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மின்சார வசதி
முகாம் நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சார வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரி நிறுவனத்தினர் 3-ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முகாமில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும், . அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தங்களக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மண்டல இணை இயக்குனர் வேலை வாய்ப்பு ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி, அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.