கரூர்
கரூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்
|கரூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்,
உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி
ஒருங்கிணைந்த கரூர் தொழிலாளர் கட்டிட வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு கரூர் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) ராமராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) ஹேமலதா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சார்நிலை அலுவலர்களுடன் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள், வாகனங்களில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டது.
சிறை தண்டனை
பின்னர் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் கூறுகையில், 14 வயதிற்குட்பட்ட எந்த குழந்தைகளையும் எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.வேலையளிப்பவர் எவரேனும் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.