ராமநாதபுரம்
கோர்ட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை திருடிய ஊழியர்கள்
|கோர்ட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை திருடிய 2 ஊழியர்களை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
கோர்ட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை திருடிய 2 ஊழியர்களை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
மதுபாட்டில்கள் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீசார் சோதனை நடத்தி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 30 வழக்குகளில் சுமார் 500 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மதுபாட்டில்களை ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
நீதிபதி உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டின் வைப்பறையில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த மதுபாட்டில்களை கோர்ட்டு உத்தரவின்படி அழிப்பதற்காக மீண்டும் எண்ணி பார்த்தபோது 13 மதுபாட்டில்கள் குறைவாக இருந்தது. காணாமல் போன இந்த பாட்டில்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும். விடுமுறை தினத்தை பயன்படுத்தி இந்த மதுபாட்டில்களை திருடி இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோர்ட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வழக்குப்பதிவு
அந்த காட்சிகளின் அடிப்படையில் கோர்ட்டின் தலைமை எழுத்தர் ராஜ்குமார்(வயது 55), ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மதுபாட்டில்களை கோர்ட்டு அலுவலக சாவியை எடுத்து சென்று திருடியதாக கோர்ட்டின் ஆவண எழுத்தர் ராமலிங்கம், மகிளா கோர்ட்டு அலுவலக உதவியாளர் தினேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் கோர்ட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை கோர்ட்டு ஊழியர்களே திருடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.