< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் ஊழியர்கள்
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் ஊழியர்கள்

தினத்தந்தி
|
1 Aug 2022 2:24 PM IST

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் கடை உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் பாதாம், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த கடை ஊழியர்கள், இவ்வாறு பொதுமக்கள் குடித்துவிட்டு கடை மற்றும் குப்பை தொட்டிகளில் வீசி செல்லும் காலி பாட்டில்களை சேகரித்து சுகாதாரமற்ற முறையில் கடையின் முன்பு அதனை தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் அந்த பாட்டில்களில் பாதாம் பால் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சிறுவர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பாதாம் பால் பாட்டில்கள் சரியான முறையில் சுத்திகரிக்கப்படாமல் தண்ணீரில் கழுவி மீண்டும் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கும் கடை உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்