காஞ்சிபுரம்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
|வாலாஜாபாத் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா ஐயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் பாபு (வயது 38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாபு ஏகனாம் பேட்டை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஐயன்பேட்டை கிராமத்தில் தனியாக வசித்து வரும் தனது தந்தை தணிகாசலத்தை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏகனாம்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காஞ்சீபுரம்- வாலாஜாபாத் சாலையில் பாபு வந்து கொண்டிருந்தபோது ஐயன்பேட்டை கால்நடை ஆஸ்பத்திரி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பாபு எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி மோதினார்.
பலி
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை பார்த்துவிட்டு சென்ற மகன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.