சென்னை
சென்னையில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்
|சென்னையில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை ஊழியர் உறிஞ்சி எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், அவற்றை செப்டம்பர் மாதத்துக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து பலரும் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரி பிரசாத் (வயது 31). இவர் பெரம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உள்ளார்.
கையில் சில்லரை இல்லாததால் அங்கிருந்த ஊழியரிடம் 2,000 ரூபாய் கொடுத்தார். அதனை அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் ஹரிபிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சில்லரை இல்லாவிட்டால் மோட்டார் சைக்கிளில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துவிடு என்று ஊழியரிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த ஊழியர் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.