சென்னை
நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் ஊழியர் மாயம் - வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் கைவரிசை
|வேலைக்கு சேர்ந்த 2 நாளில் நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் வசித்து வருபவர் உத்தம் (வயது 28). கொடுங்கையூர் சின்னாண்டி மடம் கே.எம்.கார்டனில் சொந்தமாக தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபி என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் இவரது நகை பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வருவதால் ஆர்டரின் பேரில் தங்க நகைகள் செய்வதற்காக உத்தம், தங்க கட்டிகளை வாங்கி பட்டறையில் வைத்திருந்தார். புதிதாக வேலைக்கு சேர்ந்த பாபி, பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த உத்தம், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைத்து மாயமான பாபியை தேடி வருகின்றனர்.
மாயமான அரை கிலோ தங்க கட்டியின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.