திருப்பத்தூர்
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
|ஜோலார்பேட்டை அருகே மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிலையில், மின்சாரம்தாக்கி கணவர் உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை அருகே மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிலையில், மின்சாரம்தாக்கி கணவர் உயிரிழந்தார்.
மனைவிக்கு வளைகாப்பு
ஜோலார்பேட்டை அருகே உள்ள இடையம்பட்டி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முருகன் என்கிற முருகேசன் (வயது 32). இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி நந்தினி 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகன் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடமாக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே மங்கம்மாள் குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊதுபத்தி நிறுவனத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது.
மின்சாரம் தாக்கி பலி
இதனால் மின் பழுதை சரி செய்ய ஊதுபத்தி நிறுவனம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது முருகன் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது திடீரென முருகன் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.