சென்னை
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் கட்டுப்பாட்டு மையம்
|சென்னையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு. கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு மையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள், செல்போன்கள் இல்லாத காலகட்டத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்கு கையாண்ட வியூகங்கள் வேறு விதமானவை. குற்றவாளிகள் பயன்படுத்தும் பீடி துண்டை வைத்து கூட அந்த காலத்தில் அவர்களை போலீசார் கைது செய்து விடுவார்கள். தற்போது குற்றவாளிகள் நவீனமான முறையிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
அதற்கு ஏற்ப போலீசாரும் தங்களது புலன் விசாரணையை மாற்றி உள்ளனர். தற்போது குற்றவாளிகளை பிடிப்பதற்கு செல்போன்களும், கண்காணிப்பு கேமராக்களும் போலீசாருக்கு பேரூதவியாக இருக்கின்றன. அந்த வகையில் சென்னை நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் கண்காணிக்கும் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த நவீன கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தின் கீழ் இந்த கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் 1,750 முக்கிய இடங்களில் 5 ஆயிரத்து 250 கேமராக்கள் நிறுவும் பணி தொடங்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 1,336 இடங்களில் 4 ஆயிரத்து 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது.
இந்த கேமராக்கள் மேற்கண்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். 4 ஆயிரத்து 8 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே பார்வையிடலாம்.
கேமராவில் பதிவாகும் குற்றச்செயல்களை பார்த்து உடனுக்குடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக இந்த திட்டத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, நகை பைகள் பறிப்பு, பெண்களை கேலி செய்தல், தாக்குதல், கடத்தல், வாகன திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மேற்கண்ட கேமரா காட்சிகள் வாயிலாக எளிதில் பிடிக்க முடியும்.
இந்த கேமரா காட்சிகளை பார்க்கும் வசதி கமிஷனர், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்கும் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கேமராக்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுகிறது? என்பதை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, லோகநாதன், கபில்குமார் சி ஷரத்கர் ஆகியோருக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.