< Back
மாநில செய்திகள்
முத்தரசன் வலியுறுத்தல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

முத்தரசன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சீர்காழியில் முத்தரசன் கூறினார்.

சீர்காழி:

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சீர்காழியில் முத்தரசன் கூறினார்.

முத்தரசன் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். இதுவே மிகப்பெரிய பாதிப்புக்கு அடையாளம். முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.

காப்பாற்ற முடியாது

பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது. வயல்களில் தண்ணீர் வடிந்தாலும் நெற்பயிரை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களிலும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.ஆயிரம் நிவாரணம் போதாது. கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உள்ளார். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பேரிடர் நிதியில் இருந்து பெரும் நிதியை வாங்கித்தர வேண்டும்.

வருமானம் இழப்பு

ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பெற்ற குழந்தையை தாய் பறிகொடுத்தது போல் விவசாயிகள் சாகுபடி செய்த பயிரை பறிகொடுத்து தவித்து வருகின்றனர். மீண்டும் 3 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும். விவசாயிகள் ஒரு ஆண்டுக்கான வருமானத்தை முற்றிலும் இழந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்