ராணிப்பேட்டை
சோளிங்கரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
|செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சோளிங்கர், ஆக.2-
செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பழனி, ஆணையாளர் (பொறுப்பு) விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
டி.கோபால்:- நகராட்சி தூய்மை பணி தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முறையாக தூய்மை பணி செய்யாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நகராட்சி நிர்வாகமே தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். தினசரி சுங்கவரி வசூல் ஒப்பந்தம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும் புது டெண்டர் விடாததால் நகராட்சிக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது. உடனடியாக புதிய டெண்டர் விடவேண்டும்.
அப்பங்காரகுளம் அருகே 1 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் சாலையோர தள்ளுவண்டி உணவுகள், தின்பண்ட கடைகள் மற்றும் வார சந்தையில் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும்.
சுத்திகரிப்பு நிலையம்
ஆஞ்சநேயன்:- வீடுகள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அரசு கால்நடை மருத்துவமனை அருகே இயங்கி வந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து ஓடை கால்வாயில் வெளியேற்றி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஓடை கால்வாயில் விட்டு வருகின்றனர். எனவே நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் வகையில் சுத்தகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
திருவிழாக்கள் மற்றும் ஆடி கிருத்திகை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து சோளிங்கர் வழியாக செல்லும் வாகனங்களுக்கு தனிநபர் சுங்கவரி வசூல் செய்வதை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க 120 கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் கேமராக்களை சீரமைக்க வேண்டும்.
லோகேஸ்வரி சரத்பாபு:- யோக நரசிம்ம சாமி கோவிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் செல்கிறது. பெரிய மலை அடிவாரத்தில் நகராட்சி பொது கழிப்பறை உள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டு பூட்டியே உள்ளது. பக்தர்கள் பயன்படும் வகையில் கழிவறையை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நகராட்சி உறுப்பினர்கள் சிவானந்தம், அன்பரசு, மணிகண்டன் ஆகியோர் தீர்மானத்தில் உள்ள குறைகளை தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் தெரிவித்தார்.