< Back
மாநில செய்திகள்
இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூடுதலாக கூண்டுகள் வைக்க வேண்டும்
நாமக்கல்
மாநில செய்திகள்

இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூடுதலாக கூண்டுகள் வைக்க வேண்டும்

தினத்தந்தி
|
8 Feb 2023 12:15 AM IST

இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூடுதலாக கூண்டுகள் வைக்க வேண்டும் என சேகர் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் கன்று, நாய் மற்றும் மயில்களை வேட்டையாடி வரும் சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பணிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த 5-ந் தேதி நேரில் பார்வையிட்டு சிறுத்தைப்புலியை பிடிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்தார். சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் அன்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அதில் ஒரு மாடு மட்டும் கயிரை அறுத்துக்கொண்டு ஓடியதை பார்த்து அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் அங்கு சிறுத்தைப்புலி வந்த கால்தடங்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் வனத்துறையினரிடம் அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், கூடுதலாக கூண்டுகள் அமைக்கவும், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்