< Back
மாநில செய்திகள்
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தல்
சிவகங்கை
மாநில செய்திகள்

'காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது'- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
7 Feb 2023 12:15 AM IST

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இளையான்குடி

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இளையான்குடி ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்கத் தலைவி அமுதா தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் சங்க துணை தலைவர் விக்டோரியா மேரி, ஓய்வூதியர்கள் சார்பாக பதினெட்டாம்படி, சாமிதுரை, அருள்சாமி, காயாம்பு, சுகுமாரன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

காலை சிற்றுண்டி திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனாக வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்கப்படும் சிறப்பு அகவிலைப்படி ரூ.6750-க்கு இணையாக வழங்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்கள் 50 சதவீத ஒதுக்கீடு செய்து தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் அமர்த்திட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்து சத்துணவு பணியாளர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தேவகோட்டை

தேவகோட்டை யூனியன் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தேவகோட்டை ஒன்றியத்தின் சத்துணவு சங்க தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். சண்முகம், மாணிக்கம், ஆல்பர்ட்ராஜ், போஸ் மாயாண்டி, வெள்ளைச்சாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வடிவேல், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மாநில செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் செல்லையா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்