< Back
மாநில செய்திகள்
செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை-பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
சிவகங்கை
மாநில செய்திகள்

செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை-பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
2 Feb 2023 12:15 AM IST

செட்டிநாடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல தென்னக ரெயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

காரைக்குடி

செட்டிநாடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல தென்னக ரெயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ரெயில் நிலையம்

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ராதிகா தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு பல்வேறு தீர்மானங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ராதிகா பேசியதாவது:-

திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கானாடுகாத்தான் பகுதி செட்டிநாடு பகுதியாகும். இதுசுற்றுலா தலமாக உள்ளதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் வந்து செல்கின்றனர். இதுதவிர சினிமா படப்பிடிப்பு தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த செட்டிநாடு ரெயில் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காலக்கட்டத்திற்கு முன்பு வரை அனைத்து ரெயில்களும் நின்று சென்றன. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதால் இந்த ரெயில் நிலையத்திலும் ரெயில்கள் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது இந்த வழியாக செல்லும் ரெயில்கள் இங்கு நின்று செல்லவில்லை.

கோரிக்கை மனு

இதனால் செட்டிநாடு பகுதியில் உள்ள பொதுமக்களும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும் ரெயில்களில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அவ்வாறு அவர்கள் ரெயில்கள் மூலம் வந்தாலும் அருகில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டையூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கி அங்கிருந்து மீண்டும் இங்கு வரவேண்டிய நிலை ஏற்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்களிடம் மீண்டும் இந்த பகுதியில் ரெயில்கள் நின்று செல்வதற்கு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை இந்த தொகுதியின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின்னரும் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லாவிட்டால் இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி ரெயில் நிலையத்தில் பெரும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்