< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Jan 2023 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார்.

பேட்டி

தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று தேவகோட்டையை அடுத்த புளியாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சி வந்தாலும் மழை பெய்தாலும் விவசாயிகளுக்கு தான் பாதிப்பு. அரசு தனியார் நிறுவனம் இன்சூரன்ஸ் வசூலிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள்.ஆகவே அரசாங்கமே காப்பீட்டு தொகை பெற்று விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.

1000 ஏக்கரில் 333 ஏக்கர் அழிந்தால்தான் அதை அழிவு என கணக்கில் எடுத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். கரும்பு மற்றும் நெல்லுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும்.

காவிரி குண்டாறு திட்டம்

60 கிலோ நெல்லை 1,100 ரூபாய் என விவசாயிகளிடம் வாங்குகின்றனர். அதிலும் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் விவசாயிகள் நிலையோ அப்படியே உள்ளது.எனவே பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசே நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

தேவகோட்டை, திருவாடானையில் மழை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் அரசாங்கமே கால்வாய், ஏரி, குளங்களை வெட்ட வேண்டும். காவிரி குண்டாறு திட்டம் விளாத்திகுளம் வரை செல்கிறது. எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு அதை கொண்டு வர வேண்டும். இதனால் விவசாயிகளையும் காப்பாற்றலாம். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கலாம்.

நதிநீர் ஆணையம்

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளியாகும் மழைநீர் கேரள கடலில் கலக்கிறது.ஆகவே அதை கூடலூர், கம்பம், தேனி, திண்டுக்கல் வழியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சூசை மாணிக்கம் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்