பழனியில் தமிழக நிதியமைச்சர் சென்ற ரோப் கார் திடீர் பழுது
|அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது. இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது.
சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.