< Back
மாநில செய்திகள்
இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிப்பு: ஊர்வலம் வந்த வாலிபர்கள் மீது போலீசார் தடியடி
கரூர்
மாநில செய்திகள்

இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிப்பு: ஊர்வலம் வந்த வாலிபர்கள் மீது போலீசார் தடியடி

தினத்தந்தி
|
11 Sept 2023 11:58 PM IST

இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அனுசரிக்க இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் வந்த வாலிபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நினைவு தினம் அனுசரிப்பு

கரூரில் நேற்று தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் புதிய தமிழகம் கட்சி, கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம், வீரதேவேந்திர குல வேளாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அப்போது வெங்கமேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மேற்கண்ட அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அமைப்புகளை சேர்ந்த வாலிபர்கள் ஊர்வலமாக 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வெங்கமேடு மேம்பாலம் வழியாக கரூருக்கு வந்தனர்.

போலீஸ் தடியடி

அப்போது வெங்கமேடு மேம்பாலம் அருகே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வேகமாகவும், அதிக ஒலி எழுப்பி கொண்டும் ஊர்வலமாக வந்த வாலிபர்களை கண்ட போலீசார் அவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அந்த வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் அங்கிருந்து கலைத்தனர். பின்னர் சிலரை பிடித்து அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்