< Back
மாநில செய்திகள்
தகுதியுள்ள தமிழர்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

தகுதியுள்ள தமிழர்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
30 Jun 2023 8:36 PM IST

தகுதியுள்ள தமிழர்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

தகுதியுள்ள தமிழர்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் நிர்வாக அலுவலின் மிக உயர்ந்த பதவியான தலைமை நிலையச் செயலாளர் பதவியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், மற்றுமொரு அதிகாரமிக்க பதவியான தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ஷகீல் அக்தர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒரே காலகட்டத்தில் நிர்வாகம், காவல், தகவல் ஆணையம் என்று தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிகமுக்கிய மூன்று பதவிகளிலும் தமிழர் அல்லாதவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

தமிழ்நாட்டின் ஆளுநர், தலைமை நீதிபதி என்று இந்திய ஒன்றிய அரசு தான் பரிந்துரைக்கும் பதவிகள் அனைத்திலும் வேற்று மாநிலத்தவரையே நியமிப்பதையே அடிப்படை விதியாகக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசாவது தனது ஆளுகைக்கு உட்பட்ட அதிகாரப் பதவிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். நேர்மை, திறமை மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தவிர்க்க முடியாத சூழலில் தகுதி உள்ளவர்களை நியமிப்பது என்பது ஏற்றுக்கொள்ளகூடியதே. ஆனால், ஒரே காலகட்டத்தில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை மிக்க அரசினை வழிநடத்தும் மிக முக்கிய உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதவர்களை நியமிப்பதுதான் மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநரின் கையில் சிக்கி நாள்தோறும் தமிழ்நாடு அரசும், மக்களும் சந்திக்கும் இன்னல்களை நன்கு அறிந்திருந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் இப்படி ஒரு முடிவினை ஏன் எடுத்தார்? இது உண்மையிலேயே திமுக அரசின் முடிவுதானா? அல்லது இந்திய ஒன்றிய பாஜக அரசின் பரிந்துரையை அப்படியே ஏற்று அறிவிக்கப்பட்டதா? தற்போது பணியில் உள்ள தமிழர்களில் திறமையான, நேர்மையானவர்களே இல்லையா? பணி அனுபவம் உள்ளவர்களே இல்லையா? இருந்தும் அவர்களை முற்றாக திமுக அரசு புறக்கணித்தது ஏன்? யாருக்குப் பயந்து திமுக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் மாநில தன்னாட்சி உரிமையை திமுக அரசு கட்டிக்காக்கும் இலட்சணமா? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

இவை அனைத்தையும்விட தமிழ் மண்ணின் மிக நுணுக்கமான புவியியல், அரசியல், சமூக உளவியல் சிக்கல்களையும், அண்டை மாநிலங்களுடனான தமிழர் உரிமைப் பிரச்சனைகளையும், தமிழ் மண்ணின் மைந்தர்களாலேயே உணர்வுப்பூர்வமாக அணுகி, உறுதியான தீர்வினைக் காண முடியும். இல்லையென்றால் அதிகார கொடுங்கரங்களால் எடுக்கப்படும் இயந்திரத்தனமான முடிவுகளால் கடுமையான எதிர்விளைவுகளை தமிழ்நாடு சந்திக்க நேரிடும் என்பதே கடந்த கால வரலாறு காட்டும் உண்மையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தற்போதைய முடிவினை உடனடியாக மறு ஆய்வு செய்து, தகுதியுள்ள தமிழர்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர் பதவிகளில் நியமிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்