< Back
மாநில செய்திகள்
தகுதி உள்ள ஒருவர் கூட விடுபடாமல் விண்ணப்பம் வழங்க வேண்டும்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தகுதி உள்ள ஒருவர் கூட விடுபடாமல் விண்ணப்பம் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
13 July 2023 10:56 PM IST

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள ஒருவர்கூட விடுபடாமல் விண்ணப்ம் வழங்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ஒருவர்கூட விடுபடாமல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை தாங்கள் பணிபுரியும் ரேஷன் கடையின் வரையறைக்குட்பட்ட தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வழங்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வழங்கும் பணிகளில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலரிடத்திலோ அல்லது தொடர்புடைய உள்ளாட்சி பிரதிநிதிகளிடத்திலோ உடனடியாக தெரிவித்து அதற்கான தீர்வுக்காண வேண்டும்.

பயோமெட்ரிக் முறையில்

ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை விற்பனையாளராகிய நீங்கள் சிறப்பாக மேற்கொண்ட காரணத்தால்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணியினையும் உங்கள் மூலமாக மேற்கொள்ள அறிவித்துள்ளார்.

பகுதி வாரியாக எந்த ஒரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரரும் விடுபடாத வகையில் பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், கூட்டுறவு சங்கங்கள் துணைப் பதிவாளர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்