
மயிலாடுதுறை
கோவில் விழாவில் சந்தித்த யானைகள்

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்ற 2 யானைகள் மயிலாடுதுறை கோவில் விழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தன. அப்போது அன்பின் மிகுதியால் இந்த யானைகள் ஒன்றை ஒன்று துதிக்கையால் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது.
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்ற 2 யானைகள் மயிலாடுதுறை கோவில் விழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தன. அப்போது அன்பின் மிகுதியால் இந்த யானைகள் ஒன்றை ஒன்று துதிக்கையால் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது.
யானைகள் புத்துணர்வு முகாம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுேதாறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து யானைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு யானைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு பராமாிக்கப்படும்.
2 ஆண்டுகளாக நடைபெறவில்லை
இந்த முகாமில் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை, தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை அபயாம்பிகை ஆகிய யானைகள் பங்கேற்றன.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. ஆதலால் இந்த இரு யானைகளும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு கிட்டவில்லை.
3 யானைகள்
மயிலாடுதுறையில், மாயூரநாதர் கோவில் வளாகத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சுப்பிரமணியசாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதி குடமுழுக்கு கடந்த 19-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக மயிலாடுதுறை காவிரிக்கரையில் இருந்து கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடங்கள் 3 யானைகளின் மீது கொண்டு வரப்பட்டது.
மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை, திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை தர்மாம்பாள் , திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி ஆகிய யானைகள் புனித நீர் கடங்களை சுமந்தபடி காவிரிக்கரையில் இருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தன.
துதிக்கையால் ஆரத்தழுவி மகிழ்ச்சி
புனித நீர் கடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர் அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை, திருவையாறு தர்மாம்பாள் யானை ஆகிய 2 யானைகளும் ஒன்றை ஒன்று பாா்த்து அடையாளம் கண்டு கொண்டன.
புத்துணர்வு முகாமுக்கு பின் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்டதால் உற்சாகமடைந்த 2 யானைகளும் ஒன்றை ஒன்று துதிக்கையால் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது.
பிரிய மனமின்றி பிரிந்தது
இந்த மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை தா்மாம்பாள் உற்சாகமாக பிளிறி முழக்கமிட்டது. யானை பாகன்கள் 2 யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து இரு யானைகளும் துதிக்கையால் ஒன்றை ஒன்று தழுவியபடி இருந்தன.
பின்னர் பாகன்கள் பைப்பில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 யானைகளையும் நீராட்டினர். அப்போதும் உற்சாகம் குறையாமல் 2 யானைகளும் விளையாடி மகிழ்ந்தன.
இந்த காட்சியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானையை பாகன்கள் மிகவும் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி லாரியில் ஏற்றி திருவையாறுக்கு கொண்டு சென்றனர்.
தனது தோழி அபயாம்பிகையை பிரிய மனமின்றி தர்மாம்பாள் யானை மிகவும் சோகத்துடன் லாரியில் திருவையாறுக்கு புறப்பட்டு சென்றது.