விருதுநகர்
ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
|ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்து யானைகள் மாமரங்களை ஒடித்து சேதப்படுத்தின
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்து யானைகள் மாமரங்களை ஒடித்து சேதப்படுத்தின.
மாந்தோப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வனராஜ். இவருக்கு நகராட்சி குடிநீர் தேக்கம் தென்புறம் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாய மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் 650 மா மரங்களுடன், தென்னை மற்றும் பனை மரங்களை ஊடுபயிராக நடவு செய்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது மாம்பழ சீசன் நடந்து வருவதால் மரங்களில் மாங்காய்கள் அதிக அளவில் உள்ளன. போதுமான அளவு விளைச்சல் வந்த பிறகு அறுவடை செய்யலாம் என விவசாயி வனராஜ் காத்திருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புல்லுபத்தி பீட்டில் இருந்து இரண்டு குட்டிகளுடன் கூடிய 4 யானைகள் இவரது தோப்புக்குள் தினமும் படையெடுத்து வருகிறது.
தோப்புக்குள் நுழையும் காட்டு யானைகள் அங்கிருந்த சுமார் 80 மா மரங்களை முற்றிலுமாக ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. சீசன் தொடங்கி இதுவரை ஒருமுறை கூட மாங்காய் அறுவடை செய்யாத நிலையில் காய்களுடன் சேர்த்து மாமரங்களும் மொத்தமாக சேதமாகி விட்டதாக விவசாயி வனராஜ் வேதனை தெரிவித்தார்.
இழப்பீடு
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விவசாயி புகார் அளித்துள்ளார். நேரில் வந்து பார்த்த வனத்துறையினர் யானைகளை கட்டுப்படுத்த பட்டாசுகளை வழங்கி உள்ளனர்.ஆனால் கூட்டமாக வரும் யானைகள் பட்டாசு சத்தத்திற்கு அஞ்சாமல் தொடர்ந்து மாமரங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயி தெரிவித்தார்.
பல ஆண்டுகள் தொடர்ந்து பலன் கொடுக்கும் மாமரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் தனக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காட்டு விலங்குகள் விவசாயத் தோப்புக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி வனராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.