திருப்பூர்
காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
|உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
காட்டு யானை தாக்கியது
உடுமலையை அடுத்த கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் அமராவதி வனத்துறை நர்சரியில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
முருகன் சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு அமராவதி அணை அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்று உள்ளார். பின்னர் சைக்கிளில் கல்லாபுரம் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று திடீரென்று வந்து முருகனை தள்ளிவிட்டு சென்று விட்டது.
தொழிலாளி படுகாயம்
இந்த சம்பவத்தில் முருகனுக்கு வலது காலில் ரத்தக்காயமும் உடலில் லேசான காயமும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மலைவாழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அமராவதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.