< Back
மாநில செய்திகள்
பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை ஒருவர் வணங்கும் வீடியோ காட்சிகள்சமூக வலைத்தளத்தில் வைரலானது
தர்மபுரி
மாநில செய்திகள்

பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை ஒருவர் வணங்கும் வீடியோ காட்சிகள்சமூக வலைத்தளத்தில் வைரலானது

தினத்தந்தி
|
11 May 2023 7:00 PM GMT

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் சானமாவு பகுதிக்கு வருகின்றன. அங்கிருந்து அவ்வப்போது ஒகேனக்கல்லுக்கும் வரும். இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானை சுற்றித்திரிகிறது.

இந்த யானை உணவுக்காக வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை முறித்து சாப்பிட்டு வருகிறது. தண்ணீருக்காக காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்கிறது.

இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை மாலை நேரங்களில் இந்த யானை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே ஒகேனக்கல் வனத்துறையினர் மடம் வனத்துறை சுங்கச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நுழையும் போது யானை செல்லும் பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. செல்பி எடுக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சுற்றுலா பயணி ஒருவர் சாலையை கடக்க முயன்ற அந்த யானையை வணங்கும் காட்சியும், இதையடுத்து அந்த யானை அவரை ஒன்றும் செய்யாமல் மீண்டும் வனப்பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்