< Back
மாநில செய்திகள்
தர்மபுரி வனக்கோட்டத்தில்5 கி.மீட்டரில் புதிதாக யானை தாண்டா அகழிகள் அமைக்க நடவடிக்கைமாவட்ட வன அலுவலர் தகவல்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி வனக்கோட்டத்தில்5 கி.மீட்டரில் புதிதாக யானை தாண்டா அகழிகள் அமைக்க நடவடிக்கைமாவட்ட வன அலுவலர் தகவல்

தினத்தந்தி
|
7 April 2023 12:30 AM IST

யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப்புறங்களில் நுழைவதை தடுக்க தர்மபுரி வனக்கோட்டத்தில் 5 கி.மீட்டர் அளவில் புதிதாக யானை தாண்டா அகழிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய அகழிகள்

தர்மபுரி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் மனிதர்கள், விலங்குகள் மோதலை தடுக்கவும், வனவிலங்குகள் வழி தவறி ஊருக்குள் வருவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காப்புக்காடுகளில் அதிகளவில் காணப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முனி முள் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு உள்ளூர் இன மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப்புறங்களில் ஊடுருவதை தடுக்கும் வகையில் புதிய யானை தாண்டா அகழிகள் 5 கி.மீட்டர் அளவில் அமைக்கவும் ஏற்கனவே உள்ள யானை தாண்டா அகழிகளை பராமரிக்கவும் ரூ.39 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு ரோந்து குழுக்கள்

தரம் குன்றிய காடுகளின் அடர்த்தியை அதிகப்படுத்தவும், வனவிலங்குகளின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.76 லட்சத்து 64 ஆயிரம் செலவில் நாற்றங்காலில் 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பு காடுகளில் இருந்து வெளியே வரும் யானைகளை கண்காணித்து மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதற்கு யானை தடுப்பு காவலர்கள் மற்றும் சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையே மோதலை தடுக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வன பணியாளர்கள் மற்றும் கிராம வன குழுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.2 கோடி செலவில் பணிகள்

வன நில ஆக்கிரமிப்பு மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வன குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கோடைகாலங்களில் உணவுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், காட்டு யானைகள் காப்பு காட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் வனப்பகுதிக்குள் சூரிய மின்சக்தியால் இயங்கும் மின்மோட்டார் வசதி கொண்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

வனவிலங்குகளுக்கு கசிவுநீர் குட்டை, தடுப்பணை, நீர் துளைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே உள்ளவற்றை பராமரித்து வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ரூ.2 கோடியில் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்