கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகேகிராமப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைவனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்
|ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே கிராமப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காட்டு யானை
ராயக்கோட்டை வனச்சரகத்துக்குட்பட்ட சோக்காடு பீட், போடம்பட்டி காப்புக்காடு, ஆலப்பட்டி, பூவத்தி, கெட்டூர், ராயக்கோட்டை, போடம்பட்டி, குருதட்டனூர், மூங்கில்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானை சுற்றித்திரிகிறது பகலில் வனப்பகுதிக்கு சென்றுவிடும் இந்த யானை இரவில் உணவுக்காக கிராம பகுதிகளுக்கு வருகிறது.
இதற்கிடையே இந்த யானை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி ஆலப்பட்டி காப்புக்காடு சோக்காடு அருகே அம்மாசி என்ற விவசாயியை மிதித்தது. 25-ந் தேதி இரவு மூங்கில்பட்டியை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜை மிதித்தது. கடந்த 2-ந் தேதி ராயக்கோட்டையில் இருந்து தூருவாசனூர் செல்லும் சாலையில் மாந்தோப்பில் இரவு காவலுக்கு இருந்த போடம்பட்டியை சேர்ந்த மாரி தூங்கிக்கொண்டு இருந்தபோது யானை மிதித்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விரட்டும் பணி தீவிரம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போடம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை, முட்டைகோஸ் ஆகியவைகளை மிதித்தும், தின்றும் நாசம் செய்தது. இதனால் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ராயக்கோட்டை வனச்சரகர் பார்தசாரதி தலைமையில் வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், நாராயணன் மற்றும் வனத்துறையினர் பட்டாசு, டார்ச்லைட், மற்றும் ஒலி எழுப்பி காட்டு யாைனைய அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.