
மதுரை
வளர்ப்பு யானையை பிச்சை எடுக்க வைக்கிறார்களா?

வளர்ப்பு யானையை பிச்சை எடுக்க வைக்கிறார்களா? என வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளனர்.
மதுரையை சேர்ந்த நிவாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகரில் தனியார் சார்பில் பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சுமதி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த யானையை பராமரிப்பதற்காக வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட உரிமம் கடந்த ஆண்டு காலாவதியாகிவிட்டது. அதன்பின் அந்த உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இந்த யானையை, பொதுமக்களிடம் பிச்சை எடுக்க வைத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அதை வளர்ப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இறப்பு நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களுக்கும் இந்த பெண் யானையை கொண்டு செல்கின்றனர். இது யானைகள் பராமரிப்பு சட்டத்தின்படி தவறான நடவடிக்கை.
எனவே தனியாரிடம் இருந்து யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை வன பாதுகாவலர், மதுரை மாவட்ட வன பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.