விழுப்புரம்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்:
மின்சார திருத்த சட்டத்தின் ஆபத்துகளை விளக்கியும் நாடாளுமன்றத்தில் இதனை சட்டமாக கொண்டு வருவதை எதிர்த்தும் விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. சங்கத்தின் தலைவர் அம்பிகாபதி, பொறியாளர் சங்க செயலாளர் முருகன், ஐக்கிய சங்க செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்க மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்ட மசோதா-2022 நிறைவேற்ற கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் மேற்பார்வையாளர் பழனி தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்க மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.