< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி

தினத்தந்தி
|
9 Oct 2023 1:45 AM IST

பொள்ளாச்சியில் குடிபோதையில் ஓட்டியதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சியில் குடிபோதையில் ஓட்டியதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


மது குடித்தனர்


சேலம் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகன்(வயது 34). இவரது நண்பர், சேலம் மாவட்டம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம்(29). இவர்கள் பொள்ளாச்சி ஆசிரியர் காலனியில் தங்கியிருந்து, அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.


இந்த நிலையில் கார்த்திகன், வெங்கடாச்சலம் ஆகியோர் தங்களது நண்பரான முருகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் மாக்கினாம்பட்டியில் உள்ள ஒரு பாருக்கு சென்று மது குடித்தனர். பின்னர் ஆசிரியர் காலனிக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டர் சைக்கிளை வெங்கடாச்சலம் ஓட்டினார்.


சம்பவ இடத்திலேயே...


மாக்கினாம்பட்டியில் இருந்து கஞ்சம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள கம்பிவேலியில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் கார்த்திகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்