மின் கட்டண உயர்வு: தொழில் துறை நிறுவனங்கள் நடத்தும் போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு
|மின் கட்டண உயர்வு திரும்பப் பெறக்கோரி தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. பீக்கவர் மின் கட்டணமாக ரூபாய் 3500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொகையை தவிர்க்க வேண்டும். அதேபோன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்கவும், 3.ஏ.ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் கிரில் ரோக் வெல்டிங் தொழிலில் 12 கிலோ வாட் மின் கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். தற்போதுள்ள மின்கட்டண உயர்வால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பீக்கவர் கட்டணம், மும்முனை மின் கட்டணத்தை திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக எதிர்கால தொழில் நலன்களை கருத்தில் கொண்டும், எட்டாம் கட்டமாக தொழில் துறை நிறுவனங்கள் சார்பில் வருகிற 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
மின் கட்டண உயர்வு போன்றவற்றால் தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. தமிழகத்தில் தொழில்துறை மேலும் வளர்ச்சி அடையவும், தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவும், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக முன் வர வேண்டும். தொழில் நிறுவனங்கள் சார்பில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஆங்காங்கே நடைபெறும் போராட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளும் பங்கேற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.