சென்னையில் ஓரிரு மணி நேரங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும்: மின்சார வாரியம்
|சென்னையின் பல பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் (03.12.2023) மாலை முதல் நேற்று முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், மழைநீர் தேங்காத பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஓரிரு மணி நேரங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.