< Back
மாநில செய்திகள்
லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி
தேனி
மாநில செய்திகள்

லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி

தினத்தந்தி
|
17 Dec 2022 8:36 PM IST

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து லோயர்கேம்ப் வழியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு தண்ணீர் திறக்கும்போது, மின்உற்பத்தி செய்வதற்காக லோயர்கேம்ப் பகுதியில் நீர்மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. தண்ணீர் திறக்கும் அளவை பொறுத்து மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. கடந்த 16-ந்தேதி அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,109 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து லோயர்கேம்ப்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 99 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதையொட்டி நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141.45 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்