தேனி
லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி
|லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 933 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,866 கன அடி வீதம் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை முதல் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 136.60 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 313 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.