மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
|வால்பாறையில் உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த முன்னுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை,
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படுமா? என சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
கடந்த 2016-17-ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் தாட்கோ, ஜீவன்தரா திட்டங்களின் கீழ் ஒரு மின் இணைப்பு கூட வழங்கவில்லை. அதன் பின்னர் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒரே ஆண்டில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த முன்னுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.