ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
|ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாரதிசங்கர். விவசாய தொழிலாளி. கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் உள்ள இவரது நிலத்தின் வழியாக மேலே செல்லும் மின்வயர் தாழ்வாகவும், மின்கம்பம் பழுதடைந்தும் இருந்தது. இதை மாற்றுவதற்காக நாலாட்டின்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பாரதிசங்கர் விண்ணப்பித்து இருந்தார். அங்கு இளநிலை என்ஜினீயராக பணியாற்றி வரும் கயத்தாறு பகுதியை சேர்ந்த பொன்ராஜா (வயது57) என்பவர், பாரதிசங்கரிடம் விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதிசங்கர் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின்படி நேற்று காலை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று பொன்ராஜாவை சந்தித்து ரசாயனபொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்ராஜாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.