< Back
மாநில செய்திகள்
வீடுகளுக்கு செல்லாமலேயே மின் கணக்கீடு செய்த மின்வாரிய ஊழியர்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

வீடுகளுக்கு செல்லாமலேயே மின் கணக்கீடு செய்த மின்வாரிய ஊழியர்கள்

தினத்தந்தி
|
2 Aug 2023 6:45 PM GMT

விழுப்புரத்தில் குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின்கட்டணம் வந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வீடுகளுக்கு செல்லாமலேயே மின்வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் ஏழ்மையானவர்கள். அவர்கள் கூரை, குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இதுவரை ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் இம்மாதம் அப்பகுதியில் வசிப்பவர்களில் பலரது வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் வீடுகளில் புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகே இதுபோன்று மின் கட்டணம் அதிகளவில் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதால் இந்த கட்டணத்தை தங்களால் செலுத்த இயலாது, எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் அதிகளவு மின் கட்டணம் வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெரு பகுதியில் நேற்று மின்வாரியத்துறை அதிகாரிகள், வீடு, வீடாக சென்று அங்குள்ள மின் மீட்டர்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில மின் மீட்டர்கள் அதிவேகமாக செல்வதால் மின் கட்டணம் அதிகமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மின்வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு செல்லாமலேயே, மின் கணக்கீடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் கணக்கீடு செய்யாத காரணத்தால் தான் தங்களுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்