< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே!

தினத்தந்தி
|
1 Nov 2022 1:28 AM IST

மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

தத்தளிக்கிறது

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது.

400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும்

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.

தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.

சுமையேற்றக்கூடாது

இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

திருச்சுழி அருகே புலியூரான் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி:- மக்கள் வாழ்வுநிலை குறித்து சிந்திக்காமல், மின் கட்டணத்தை உயர்த்தி அவர்களின் தலைமீது சுமையேற்றக்கூடாது. மக்களின் உணர்வுகளுக்கும், நலன்களுக்கும் எதிராக உள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.

தொழில்கள் பாதிப்பு

ஆலங்குளம் இருளப்ப நகரில் ரைஸ்மில் நடத்தி வரும் கோபால்சாமி;-

நான் சிறிய அளவில் ரைஸ்மில் நடத்தி வருகின்றேன். பொதுமக்களுக்கு மாட்டு தீவனத்திற்கு அரிசி, மாவு, போன்றவற்றை அரைத்து கொடுக்கும் பணியை செய்து வருகின்றேன்.

இதுவரை 2 மாதத்திற்கு ஒருமுறை ரூ.9 ஆயிரம் மின்கட்டண டெபாசிட் கட்டி வந்தேன். இப்போது 2 மாதத்திற்கு ஒருமுறை ரூ.18 ஆயிரம் டெபாசிட் கட்ட உத்தரவு வந்து உள்ளது. பொதுமக்களிடம் அதிகமான அரவை கூலி வாங்க முடியவில்லை. எனவே தொழில் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகடை பஜார் ஜவுளி வியாபாரி முனியாண்டி:-

மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் தற்போது பழு அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்பு தற்போது சிறிதளவு வியாபாரமே நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்து அதிக தொகை வராத அளவு செய்ய வேண்டும். ஏனென்றால் வியாபார நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அதிகமாக உள்ளது. இதனால் ஜவுளி தொழில் உள்பட அனைத்து ெதாழில்களும் பாதிக்கப்படும்.

நடுத்தர குடும்பத்தினர்

தாயில்பட்டி அருகே உள்ள அய்யனார் காலனி அருணாதேவி:-

நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். குறைந்த அளவு சம்பளத்தில் குடும்பம் நடத்தி வரும் நிலையில் தற்போது மின் கட்டண உயர்வினால் மிகவும் சிரமப்படுகிறோம். மின் கட்டண உயர்வை சமாளிக்க என்ன செய்வது என தெரியாத நிலையில் உள்ளோம். எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் மின்கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆதலால் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

8 மணி நேரம் வசூல்

விருதுநகர் மாவட்ட சிறு தொழில் சங்க செயலாளர் குருசாமி:-

தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது தான் என்றாலும் அதன் அளவு சிறு தொழில் முனைவோரை பெருமளவில் பாதிக்கும் நிலை உள்ளது. பொதுவில் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் 80 சதவீதம் சிறு, குறு தொழில்கள் உள்ளன. இதுவரை ஒரு ஹெச்பி உள்ள நிறுவனங்களுக்கு நிலையான கட்டணமாக ரூ. 35 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 ஹெச்பி வரை ரூ. 70 ஆகவும், 50 ஹெச்பிக்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு ரூ, 150 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிலும் உச்சகட்ட மின் பயன்பாடு உள்ள நேரங்களில் 25 சதவீதம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் 8 மணி நேரம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் தொழில் நிறுவனம் செயல்படாவிட்டாலும் அந்த தொழில் நிறுவனம் நிலையான கட்டணமாக குறைந்தபட்ச மாதம் ரூ15 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. கொரோனா பாதிப்பு முடிந்து தற்போது தான் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஓரளவு செயல் பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்