தர்மபுரி
மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
|தமிழகத்தில் ஆதார் எண் இணைப்புகட்டாயம் என அறிவிப்பு வந்ததை அடுத்து மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.
சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
இணைப்பது கட்டாயம்
தற்போது வங்கிக்கணக்கு எண், வருமான வரிக்கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்தகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.
ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.
அமைச்சர் விளக்கம்
தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.
எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.
கால அவகாசம் வழங்க வேண்டும்
இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆசை பாஷா:-
மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மின் இணைப்புகளில் முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதாக அரசு கூறுகிறது. ஆதார் எண் இணைப்பை சாதாரண மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். உரிய கால அவகாசம் வழங்கி ஆதார் இணைப்பிற்கு சிறப்பு முகாம்களை மின்சார வாரியம் நடத்தவேண்டும்.
அதிர்ச்சி அளிக்கிறது
ஏரியூரை சேர்ந்த கிருஷ்ணன்:-
மின் கட்டண உயர்வால் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் ஏற்கனவே கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் திடீரென மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது ஏழை-எளிய, நடுத்தர மக்களை அலைக்கழிக்கும் செயல் ஆகும். இந்த உத்தரவை மின்சார வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கவலையை ஏற்படுத்தி உள்ளது
திம்மம்பட்டியை சேர்ந்த சித்ரா:-
வீடுகளுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரம் ஏழை நடுத்தர மக்களுக்கு பயனளிக்கிறது. இப்போது திடீரென மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்து இருப்பது, இனி வரும் காலங்களில் மின் கட்டண மானியம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பலர் பேசி கொள்கிறார்கள். இது சாதாரண மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின் கட்டண மானியத்தை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொழில்நுட்ப பிரச்சினை
கே.ஈச்சம்பாடியைச் சேர்ந்த ராணி:-
கிராமப்புறங்களில் பல வீடுகளின் மின் நுகர்வோர் எண் குடும்ப தலைவர் பெயரில் இருக்கும். தற்போது அனைத்து வீடுகளுக்கும் ஆதார் எண்ணை இணைக்கும் போது மின் கட்டண சலுகை அனைத்து மின் இணைப்புகளுக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆதார் இணைப்பு குறித்து சாதாரண மக்களுக்கு முழுமையாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு விட்டு உரிய கால அவகாசத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதேபோல் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று மின் நுகர்வோரின் ஆதார் எண்ணை பெற்று இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார அளவை கணக்கிட வரும் மின்சார வாரிய பணியாளர்கள் மூலமாகவே இந்த பணியை மேற்கொள்ளவேண்டும்.
அரசு தெளிவுபடுத்தி உள்ளது.