செங்கல்பட்டு
தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை
|தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள சாலையின் நடுவே ஒரு ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது முதல் கட்ட விசாரணையில் இறந்து போன நபர் திருச்சியை சேர்ந்த பார்த்திபன் (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே ஒரு வீட்டு திண்ணையில் தினமும் தூங்கிவிட்டு செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்து வந்ததுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.