சென்னை
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை
|முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை வடபழனி 100 அடி சாலை, பெரியார் பாதை பகுதியில் உள்ள நடைபாதையில் முகத்தில் காயங்களுடன் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இறந்து கிடந்த அவர் யார்? என போலீசார் விசாரித்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர், சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஜேம்ஸ் வேதா ஜார்ஜ் (வயது 62) என்பதும், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேம்ஸ் வேதா ஜார்ஜ் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) என்பவருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் வேதா ஜார்ஜ், ராஜ்குமாரை தாக்கினார். இந்த முன்விரோதம் காரணமாக மிகுந்த கோபத்தில் இருந்த ராஜ்குமார், ஜேம்ஸ் வேதா ஜார்ஜை தாக்க சமயம் பார்த்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இரவு வடபழனி 100 அடி சாலையில் நடந்து சென்ற ராஜ்குமாரை, ஜேம்ஸ் வேதா ஜார்ஜ் மீண்டும் தரக்குறைவாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அருகில் இந்த கட்டையை எடுத்து ஜேம்ஸ் வேதா ஜார்ஜ் முகத்தில் தாக்கி கொலை செய்துவிட்டு அருகில் இருந்த குப்பை தொட்டியில் கட்டையை போட்டு விட்டு தப்பிச்சென்றுவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராஜ்குமாரை வடபழனி போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.