< Back
மாநில செய்திகள்
எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
10 July 2023 12:31 AM IST

நெய்வேலியில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர் இவரது தம்பி சாரங்கபாணி (65). சம்பவத்தன்று விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் சாரங்கபாணி மனைவி ராஜாமணி என்பவர் பசுமாட்டை கட்டியதாக தெரிகிறது.

இதைபார்த்த விஸ்வநாதன் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் மாடு கட்டுகிறாய் என கூறி தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமணி, சாரங்கபாணி, இவர்களது மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் ஒன்று சேர்ந்து இருப்பு குழாய் மற்றும் கட்டையால் கஸ்தூரியை தாக்கினர். அதை தட்டிக்கேட்ட அவரது கணவர் விஸ்வநாதன், இவரது மகன் எலக்ட்ரீசியன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோரையும் சரமாரியாக அவர்கள் தாக்கினர்.

கொலை வழக்காக மாற்றம்

இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்து கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி பிரிவின் கீழ் நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ரகுபதியின் உறவினர்கள் அங்குள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ரகுபதியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய உதயசூரியன், ரஞ்சனிகுமார், பரிமளா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரகுபதி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்