திருவள்ளூர்
பொதட்டூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
|பொதட்டூர்பேட்டை அருகே மின் பழுதை சரிபார்க்கும்போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கன்னிகாம்பாபுரம் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). இவர் அதிமாஞ்சேரி பேட்டை மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு வேளாங்கண்ணி (40) என்ற மனைவியும் அலெக்ஸ் (18), அணில் குமார் (16), அருண் (15) என்ற 3 மகன்கள் உள்ளனர்.
வெங்கடேசன் தனது கிராமத்தில் மின்சார பழுதை சரி செய்ய மின்கம்பத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத வகையில் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.