திருச்சி
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
|மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மின் ஊழியர் பலி
நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 36). இவர் திருச்சி துணை மின்நிலையத்தில் களப்பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் வேலை செய்தபோது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் காரணமாக திருச்சி துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
போராட்டம்
மேலும் ராஜீவ்காந்தியின் மனைவி பாக்கியலட்சுமி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தில், தனது கணவரின் சாவுக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், பிரேத பரிசோதனை செய்ய ராஜீவ்காந்தியின் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக அவர்கள், ராஜீவ்காந்தியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்ற வைத்த மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராஜீவ்காந்தியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதுவரை பிரேத பரிசோதனை செய்து உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக புதிய தமிழகம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ராஜீவ்காந்தியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் சென்று தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.