தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரெயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு
|சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 5 மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
சென்னை,
கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து இரவு செல்லும் 5 மின்சார ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது:-
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.